×

இந்தூர் தொகுதியில் சுமித்ரா மகாஜனுக்கு எதிராக சல்மான் கானை நிறுத்த காங்கிரஸ் அதிரடி திட்டம்

மும்பை: மக்களவைத் தேர்தலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை களமிறக்க காங்கிரஸ் விரும்புகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் அவரை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்  கூறுகின்றன. ஆனால், இதற்கு சல்மான் கான் தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் ஏதும் காங்கிரசுக்கு வரவில்லை.பாலிவுட் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் சல்மான் கான் இதுவரை அரசியல் பற்றி  பேசியதும் இல்லை. அரசியல் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியதும் இல்லை. எந்த கட்சியுடனும் தனக்கு தொடர்பு இருப்பதாக காட்டிக்  கொள்ளாத சல்மான் கான், அரசியல் தலைவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட சல்மான் கானை தேர்தல் களத்துக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சி காய்களை நகர்த்தி வருகிறது. சல்மான் கான் சிறுவயது முதலே மும்பையில் வசித்து வந்தாலும் அவர் பிறந்தது மத்தியப் பிரதேசத்தில். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள கல்யாண்மல் நர்சிங் ஹோமில்தான் அவர் பிறந்தார். இதனால், அவர்  இந்தூர் நகரின் மண்ணின் மைந்தனாக கருதப்படுகிறார்.

அவர் தற்போது மத்தியப் பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்துறை தூதராக இருப்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானை தேர்தல் அரசியலுக்கு இழுத்து வரும் யோசனையை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தான் முதலில்  தெரிவித்தார்.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடந்த தேர்தலின்போது இந்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அந்த தொகுதியில் அவர்தான் போட்டியிடவுள்ளார்.அவருக்கு எதிராக வலுவான அதேவேளையில் மக்களிடையே நன்கு பிரபலமான ஒருவரை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி பிரசித்தி பெற்ற ராமாயணம் தொடரில் ராமராக நடித்த  நடிகர் அருண் கோவிலை இந்தூர் தொகுதியில் நிறுத்துவது குறித்து முதலில் காங்கிரஸ் பரிசீலித்தது.
ஆனால், சுமித்ரா மகாஜனுக்கு அவர் சரியான போட்டியாளராக இருக்கமாட்டார் என கமல்நாத் கருதுகிறார். இதனால் சல்மான் கானை இந்தூர் தொகுதியில் களமிறக்க வேண்டும் என்று அவர் காங்கிரஸ் மேலிடத்தில்  வலியுறுத்தியுள்ளார். காங்கிரசின் இந்த திட்டம் குறித்து சமீபத்தில் சல்மான் கானிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் ஏதும் வரவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

நடிகை கரீனா கபூர் நழுவல்
இந்தூர் தொகுதியில் சுமித்ரா மகாஜனுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி முதலில் நடிகை கரீனா கபூரை அணுகியது. அவரது கணவரும் நடிகருமான சைப் அலிகான் மத்தியப்  பிரதேசத்தின் ராஜவம்சத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த குடும்பத்துக்கு என்று தனி மரியாதை உள்ளது. இதனால் கரீனா கபூரை இந்தூரில் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால், அரசியலில் தனக்கு ஆர்வமில்லை என்று கூறி  கரீனா கபூர் ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Salman Khan against Sumitra Mahajan ,constituency ,Indore , Against, Sumitra Mahajan,Indore, Salman Khan
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!